ஓம் ஏழையை காப்பாய் போற்றி

About Us

பூஜை நேரம்

  • amman foot
    9.00 AM - 10.30 AM
  • amman foot
    5.00 PM - 6.00 PM

இறை தரிசனம்

  • amman foot
    பத்ரகாளி அம்மன்
  • amman foot
    பிள்ளையார்
  • amman foot
    மஹாலக்ஷ்மி
  • amman foot
    முருகன்
  • amman foot
    வைரவர்
  • amman foot
    தக்ஷணாமூர்த்தி
  • amman foot
    சண்டேஸ்வரர்

ஓம் இருள் நீக்குபவளே போற்றி

மருதாம்புலத்தாலின் அற்புத அமைவிடம்

இலுப்பை மரத்தின் அடியினிலே…
இலங்கும் திவ்ய ஒளியென -எம்…
குலத்தின் காவலெனப் பொலிகையில்..
குடிகொண்டாள் மருதாம்புல மாதரசி!
நலமுடனே கந்தர் வேலர் குமானியர்..
நல்மனத்தால் ஆதரித்துச் சூலம்..
துலங்கிடும்படி ஏற்றி வழிபட!
மூலமென அமர்ந்தாளெங்கள் பத்திரகாளி..
மூவுலகும் அவளருட் காட்சி!

 
சுண்ணக்கல் கொண்டவொரு ஆலயம்..
சுந்தரியாள் எழில் தாங்க!
வண்ணமுடன் பூசைகளும் ஆனது..
வந்ததொரு கனவிலே உருவமாய்..
எண்ணத்தில் தோன்றினாள் தனக்கென..
எழிலான ஆலயம் கட்டுக என்றே..!
கண்ணெழில் அம்பாள் காட்டினாள் பாதை..
கருவறையும் சிறப்புடன் பொலிவுற…
பண்ணெழிற் பொலிகண்டி மண்ணிலே..
பதிகொண்டாள் அன்னை புகழுடன்..!
எண்ணிலா இன்பம் எமக்கீந்தாள்!
எல்லாமாகி என்றும் எமைக்காப்பாள்!

ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி

தல வரலாறு

ஆரம்ப காலத்தில் பிரபஞ்சத்தில் மாதா சக்தி தெய்வசக்தியாக ஆறு, குளம், விருட்சம் போன்ற இடங்களில் வியாபித்து திவ்விய ஒளி மூலமாகவும் அசரீதி மூலமாகவும் தனது தெய்வீகத்தன்மையை வெளிக்காட்டி அடியவர்களிற்கு அருள்பாலித்துள்ளார். ஆரிய கலாச்சாரம் தொடங்க முன்னரே சக்தி வழிபாடுகள் இருந்ததாக வரலாறு சான்றுகள் கூறுகின்றன. இந்தவகையில் ஈழத்திருநாட்டின் திலகமாய் விளங்கும் யாழ்பாணம் வடமராட்சிப் பகுதியிலே பொலிகண்டி கிராமத்திலே மிகவும் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் பல உள, அவற்றிலே இவ்வூருக்கு சிறப்பாய் மத்தியில் அமையப்பெற்ற ஆலயமே பொலிகண்டி மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயம் 1800ஆம் ஆண்டளவில் பொலிகண்டி அதிவீரசிங்க முதலியார் பரம்பரையில் வந்த கந்தர், வேலர், குமானியர் ஆகியோருக்குச் சொந்தமான மருதாபுலம் என்னும் காணியில் இருந்த இலுப்பை மர அடியிலே திவ்விய ஒளியாகத் தொன்றி தன்னை அவ்விடத்திலே ஆதரிக்கும்படி கூற, கந்தர், வேலர், குமானியர் ஆகியோர் சூலம் அமைத்து வழிபட்டு அன்னையின் அருளாட்சி இவ்வூருக்குக் கிடைக்கப்பெற்றது. பத்திரகாளி அனுக்கிரகம் காலவோட்டத்தில் வியாபித்து இக்கிராமம் மட்டுமல்லாது ஏனைய கிராமங்களுக்கும் கிடைக்கப்பெற்றது. இதனால் அவர்கள் தங்களுடை நேர்த்திகளை செய்து வழிபட்டுச் சென்றனர். இக்காணி உரிமையாளர்கள் தலைமையில் சுண்ணாம்புக்கல்லினால் ஆலயம் அமைக்க 1875ஆம் ஆண்டு சங்குஸ்தாபனம் (அத்திவாரமிடல்) செய்து ஆலயம் அமைக்க ஆரம்பித்தார்கள். 1889ஆம் ஆண்டு திருமுகத்தையும் சூலத்தையும் வைத்து கிராமிய வழிபாட்டு முறைக்கு அமைவாக பூசைகளை செய்து வந்தார்கள். இக்காலத்தில் பூசை வழிபாடுகளை கந்தர் பரம்பரையில் வந்த சிதம்பரப்பிள்ளை செல்லையா ஐயர் என்பவர் ஆற்றி வந்தார். 

இக்காலப்பகுதியில் ஆலயத்தில் தெய்வீகத்தன்மை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக சிறப்பபுற்று வந்தது. இவ்வூரில் வாழ்ந்த சன்னாசி கந்தையா ஸ்வாமியார் என்பவர் அம்பாளிடத்தே அளவுகடந்த பக்தி கொண்டவரால் இருந்ததன் காரணமாக அம்பாளின் திருவருள் பிரசாதம் அவர் மீது வியாபித்து அடியார்களுக்கு கடடுச்சொல்லுதல், நோய்களுக்கு மருந்து செய்தல் போன்ற தெய்வீகத்தன்மைகளை ஆற்றிவந்தார். இதனால் ஆலயத்தில் அடியார்கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தினப்பூசை. வைகாசிப்பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை. தைப்பொங்கல் போன்ற தினங்கள் சிறப்பாக செய்த வந்தார்கள். மேற்படி ஆலய பூசகர் காலவோட்டத்தில் வயோதிபம் ஏற்பட்டு கடமை செய்யமுடியாத நிலை ஏற்பட்டபோது இவருடைய கடமைகளிற்காக இவ்வூரில் வாழ்ந்த சு.ஆ.கனகசபாபதி தேசிகர் அவர்கள் பூசைப்பொறுப்புக்களை ஏற்று நடத்திவந்தார். இவர் காலத்திலும் ஆலயத்தின்  வளர்சி மேலோங்கியது. காலவோட்டத்தில் தெய்வீகத்தன்மை மிகவும் சிறப்பு நோக்கியதாய் எமது கிராமத்தில் உள்ள கந்தவனக் கடவை முருகப்பெருமான் மானம்பூ உற்சவத்திற்காக இங்கு எழுந்தருளுவார். மேலும் பொலிகண்டி இருப்பை மூலை பிள்ளையாரும் இங்கு வந்து வேட்டையாடிச் செல்வது வழமை. இத்தினங்களில் அம்பாளுடைய ஆலயம் கோலாகாலமாக இருக்கும்.

காலம் பல கடந்து சுண்ணாம்புக்கல்லால் அமைக்கப்பட்ட ஆலயம் பழுதடைந்திருந்தமையால் கந்தர் பரம்பரையில் வந்த நாகலிங்கம் தங்கம்மாவின் கனவிலே காட்சி கொடுத்து தனக்கு ஆலயம் புதிதாக அமைக்குமாறு தெய்வீகத்தன்மையினால் உணர்த்தியதன் பேறாக அம்பாளிற்கு ஆலயம் அமைக்க எண்ணினார். இப்படியாக இருக்க பூசைக்கடமைகளை செய்த சு.அ.கனகசபாபதி தேசிகர் கடமையில் இருந்து விலகினார். இந்நேரத்தில் அம்பிகையின் திருவுள்ளமோ என்னமோ யாம் அறியோம். இக்கிராமத்தில் வாழ்ந்த பிரமஸ்ரீ.சந்தானராமசர்மா ஐயா (மாப்பிள்ளை ஐயா) என்பவரிடம் பூசைப்பொறுப்புக்களை ஒப்படைத்தார்கள்.

இந்நிலையில் திருமதி.தங்கம்மா அவர்களும் அவருடைய கணவர் சுப்பிரமணியம் நாகலிங்கம் ஆசிரியர் அவர்களும் முன்நின்று திருமதி.தங்கம்மாவிற்கு சொந்தமான மருதாம்புலக்காணியில் ரமலஸ்தானம் (கருவறை) அமைக்க, 02.09.1960  சர்வாதி வருஷம்

ஆவணி மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.30 – 10.30 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபனம் செய்தார்கள். இதன் பின் பழைய கோயிலை இடித்து அகற்றி தற்போது இருக்கும் மூலஸ்தானத்திற்கு 05.12.1960ஆம் ஆண்டு சர்வாதி வருஷம் கார்த்திகை மாதம் 20ஆம் நாள் திங்கட்கிழமை பகல் 12.57 மணிமுதல் 2.31 மணிவரையுள்ள சுபவேளையில் அத்திவார வைபவம் இடம்பெற்றது. கருவறை என்று கூறப்படும் மூலஸ்தானத்தையும் அதனுடன் இணைந்த அர்த்தமண்டபத்தையும் மூலவிக்கிரகம், எழுந்தருளி விக்கிரகம், சிம்மபலிபீடம் ஆகியவற்றை நாகலிங்கம் தங்கம்மா அவர்களின் உபயமாகவும், மகாமண்டபத்தை செல்லப்பா தம்பிராசா அவர் பரம்பரையில் அவருக்குக் கிடைக்கப்பெற்ற மருதாம்புலக்காணியில் கட்டினார். தரிசன மண்டபத்தை V.K.V.வேலும்மயிலும் அவர்களின் உபயமாகவும், தம்ப மண்டபத்தை பொது உபயமாகவும், வைரவரை கிருஸ்ணபிள்ளை மகேஸ்வரி அம்மாவிற்குரிய மருதாம்புலக்காணியில் சி.கிருஸ்ணபிள்ளை உபயமாகவும், தீர்த்தக்கிணற்றினை வாரித்தம்பி சின்னையா தனது காணியில் வெட்டினார். 

மேலும் மடப்பள்ளியையும் இவர்களே நிறுவினர். மணிக்கூட்டுக்கோபுரம் வதிரி திருமதி.நடராஜா தங்கமணி அவர்களின் உபயமாகவும், சுற்றுமதில், வாகனசாலை, களஞ்சியம் ஆகியவற்றை மூலஸ்தானத்தை உபயமாகவும் செய்வித்த நாகலிங்கம் தங்கமாவின் உபயமாகவும் செய்தார்கள். இப்படியாக திருப்பணிகள் நடைபெற்று 1977ஆம் ஆண்டு சித்திரை மாதம் சுவாத் நட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் செய்ய முகூர்த்த விண்ணப்பம் செய்தார்கள். இக்கும்பாபிஷேக மூலஸ்தான செலவீனங்களை முழுமையாக திருமதி.நாகலிங்கம் தங்கம்மா அவர்களே பொறுப்பேற்று செய்துவைக்க பத்திரகாளி அம்பாள் திருவருள் பாலித்தார்கள் இத்திருப்பணியில் இவர்களோடு பெரியதம்பி அருணாசலம் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. 

இக்கும்பாபிஷேக கிரியைகளை தலைமைதாங்கி நடத்த எமதூர் குரு பரம்பரையில் வந்தவரும் பொலிகண்டி கந்தக்கடவை பிரதமகுருவுமான சிவப்பிரமஸ்ரீ க.சோமசுந்தரக்குருக்கள் ஐயா தலைமையில் மாவை ஆதீனத்தைச் சேர்ந்த சிவப்பிரமஸ்ரீ.ஐ.வைத்தியநாதர் குருக்கள் அவர்களால் பக்த் பூர்வமாக மஹா கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது கும்பாபிஷேகத்தின் போது சு.நாகலிங்கம் ஆசிரியர் அவர்களுடன் அவர்களுக்கு உதவியாக நின்றுதவிய அன்பர் திருவாளர் தம்பிராச அப்பா அவர்களையும் மறந்துவிடமுடியாது. 

இதன்பின்னர் மூன்றுகாலப் பூசையும், சிவராத்திரி, பங்குனித்திங்கள். வைகாசி விசாகப் பொங்கல், ஆடிப்பூரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பத்துநாட்கள் அலங்கார உற்சவம் என்பன கொண்டாடப்படுகிறது. தீர்த்தோற்சவத்தில் கந்தர் பரம்பரையில் வந்த காசிநாதர் தெட்சனாமூர்த்தி ஆரம்பகாலங்களில் அர்த்த தேவருடன் தீர்ததமாடினர். அதன்பின் விருத்தாசலம் சிவரூபன் அதன்பின் கிருஸ்ணபிள்ளையின் பேரன் கதர்காமநாதன் கலைமோகன் அந்த நற்காரியத்தை பெரும் பேறாக கருதி செய்து வருகின்றார். மேலும் கேதாரகெளரி வழிபாடு, நவராத்திரி, கார்த்திகை, விளக்கீடு, பிள்ளையார் கதை போன்ற நித்தய நைமித்திய விழாக்கள் எல்லாம் சிறப்பாக நடைபெறுகின்றன. 1978ஆம் ஆண்டு வைகாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் விநாயகப்பெருமான் இல்லாத குறையை திருவாளர் வைரமுத்து நடராஜாவும், திருமதி.இராசலட்சுமி அவர்களும் விநாயகப்பெருமானுக்கு கோயில் அமைத்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

 

1982ஆம் ஆண்டு காலப்பகுதியில் செயலாளராக இருந்த இராசா தங்கவேலாயுதம் அவர்களின் முயற்சியினால் ஆடி மாதம் பொதுமக்களின் உபயமாக வசந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு சண்டேஸ்வரி உற்சவமூர்த்தி திரு.கி.அருள்நாதர் என்பவரின் முயற்சியினால் பொது மக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்டது. ஆடிப்பூரத்தில் அம்பாள் கந்தவனக்கடவை சமுத்திர தீர்த்தமாடி பொலிகண்டி சல்லியம்பதி விநாயகர் ஆலயத்தில் பொலிகண்டி குருகுல மக்களால் நடாத்தப்படும் விஷேட பூசைகளை ஏற்று கந்தப்பெருமானின் ஆலயத்திற்குச் சென்று அங்கு இடம்பெறும் வழிபாடுகளை ஏற்று மீண்டும் தனது ஆலயத்தினை நோக்கி செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இவ்வாலயத்தில் ஆரம்பகாலம் தொடக்கம் இன்றுவரை அதிவீரசிங்க வழித்தோன்றலில் வந்தவர்களான திரு.நாகலிங்கம் தங்கம்மா குடும்பம், கிருஸ்ணபிள்ளை கலியுகவரதன் குடும்பம் ஆகியோரால் நாசக வளர்ந்து பானைப் பொங்கல் இன்றுவரை நடந்துவருகின்றது.

1977ஆம் ஆண்டு முதல் 2005 வரை நடைபெற்ற கும்பாபிஷேக மணவாளக்கோல உபயத்தை திருமதி.நாகலிங்கம் தங்கம்மா குடும்பத்தவர்களே செய்து வருகின்றார்கள். மேலும் 2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற பாலஸ்தாபனத்தின் பின் ஆலய மூலஸ்தான திருப்பணியை திரிதள விமானத்தை கொண்டதாகவும் இரட்டைப்பஞ்சாங்க வேலைப்பாடுகளுடன் மூலஸ்தானத்தை அழகுற அமைவதற்கான சகல செலவீனங்களையும் திரு.திருமதி.சிவநாதன் பத்திராதேவி குடும்பம், திரு.சங்கர் குடும்பம். திரு.சிவரூபன் குடும்பம். திரு.விவேகானந்தன் குடும்பம், திரு.சபேஷ் குடும்பம் ஒன்று சேர்ந்து செய்தார்கள். அது மட்டுமல்லாது கும்பாபிஷேகம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நாகலிங்கம் மகன் விவேகானந்தனின் மைத்துனரான அப்பாத்துரை சண்முகநாதனும் மூலஸ்தான கும்பாபிஷேகத்திற்கு நிதி உதவி வழங்கி ஊக்கப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும். நிர்மாண வேலைகள் சிவப்பிரமஸ்ரீ ச.வைத்தியநாதக்குருக்கள் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டு விகிர்தி வருடம் வைகாசி மாதம் 20ஆம் நாள் (03.06.2010) வியாழக்கிழமை காலை 6.00 8.41வரையுள்ள மிதுன லக்கன சுபமுகூர்த்த வேளையில் மிகவும் சிறப்பான முறையில் சிவப்பிரமஸ்ரீ ச.வைத்தியநாதக்குருக்கள் அவர்களால் நவகுண்ட மகாகும்பாபிஷேகம் மிக வெகு விமரிசையாக நடந்தேறியது.

இவ்வாலயத்தில் 1977ஆம் ஆண்டு முதல் சுப்பிரமணியம் நாகலிங்கம், வாரித்தம்பி சின்னையா, செல்லப்பா தம்பிராசா ஆகியோரின் சந்ததியில் ஒருவரை தலைமைத்துவமாக கொண்ட நிர்வாக முறை இன்றுவரை பரிபாலனம் செய்கிறது. பொலிகண்டி மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் அருள் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.

 

தகவலாளர்கள் :-

திரு.திருமதி.சிவநாதன்

திரு.தம்பிராசா காசிநாதர்

திரு.திருமதி.விவேகானந்தன்

திரு.சின்னையா கிருஸ்ணபிள்ளை

 

Our Iconic Poja